படிக்கட்டில் தொங்கியதால் கண்டித்த ஓட்டுநர்; மாணவர்கள் ரகளையால் ஊர் மக்கள் ஆத்திரம்!
உளுந்தூர்பேட்டை அருகே, அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய கல்லூரி மாணவர்களுக்கும், அவர்களைக் கண்டித்த ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், கம்புகளால் மாணவர்களை விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தின் பின்னணி:
நேற்று காலை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்திலிருந்து விருத்தாசலத்திற்கு ஒரு அரசுப் பேருந்து சென்றது. அந்தப் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். வழக்கம் போலச் சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
பேருந்து பிள்ளையார்குப்பம் கிராமத்தை நெருங்கியபோது, உள்ளூர்வாசியும், அதே போக்குவரத்துத் துறையின் ஓட்டுநருமான சோமசுந்தரம் என்பவர், வீட்டில் இருந்து பிரம்பு கம்புடன் வந்து மாணவர்களைக் கண்டித்தார். அப்போது, மாணவர்களை ஆபாசமாக திட்டி, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்கள் ரகளையால் மோதல்:
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்தின் முன்னே நின்று மறியல் செய்தனர். பஸ் ஓட்டுநர், நடத்துநர் அல்லாத ஒருவர் எப்படி எங்களைத் தாக்கலாம்? நாங்கள் பஸ்ஸை எடுக்கவிட மாட்டோம் என ரகளையில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, மாணவர்கள் சிலரைத் தள்ளிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள், கம்புகளை எடுத்து மாணவர்களை ஓட ஓட விரட்டியடித்தனர்.
போலீஸ் நடவடிக்கை:
பின்னர், அடுத்த பேருந்தில் ஏறிய மாணவர்கள், உளுந்தூர்பேட்டைக்கு வாங்க, யாரென்று காட்டுகிறோம் எனக்கூறிவிட்டுச் சென்றனர். ஆனால், பொதுமக்களும் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்று மாணவர்களை விரட்டி அடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவர்கள் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், மாணவர்களுக்குப் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தி அவர்களை அனுப்பிவைத்தனர்.