புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5 லட்சம் இழப்பீடு!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அறந்தாங்கி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கனி (62), அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு, இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, குழந்தையின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட பெற்றோர், விசாரித்தபோது இந்தச் சம்பவம் தெரியவந்தது. உடனடியாக, குழந்தையின் பெற்றோர் திருமயம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் முத்துக்கனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ், குற்றவாளி முத்துக்கனிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ₹12,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.