தங்கக் கடத்தல் வழக்கில் கொலையான இளைஞர்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு! Murder case in gold smuggling racket transferred to CB-CID

போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி!


பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கி கொலை செய்யப்பட்ட தனது மகன் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சேர்ந்த சீனி பாத்திமா, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகன் சையது அப்துல்லா, நண்பர்களுடன் இணைந்து தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அப்போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடத்தல் கும்பல், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டத் தங்களது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டதாகவும், பின்னர் தனது மகனைக் கடத்திக் கொலை செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். உள்ளூர் போலீஸ் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, “இந்த வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் முறையாக விசாரணை நடத்தவில்லை. கொலை சம்பந்தமான போதிய ஆதாரங்களையும், வங்கி பணப் பரிவர்த்தனை ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலையான நபரிடமிருந்து குற்றவாளிகளுக்குப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பான வங்கி ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றவில்லை. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!