சாலைகளில் வழிந்தோடிய பெட்ரோலால் பதற்றம்; தீயணைப்பு வீரர்கள் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கை!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய கோர விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலிய முனையத்தில் இருந்து பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அருமந்தை அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், டேங்கர் லாரி ஓட்டுநரான செஞ்சியைச் சேர்ந்த மகேந்திரன் (30), இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தின் காரணமாக டேங்கர் லாரி சேதமடைந்து, சுமார் 5,000 லிட்டர் பெட்ரோல் சாலையில் வழிந்தோடியது.
விபத்து குறித்துத் தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்த மகேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, சாலையில் வழிந்தோடிய பெட்ரோல் மீது தண்ணீர் அடித்து, தீ விபத்து ஏற்படாமல் இருக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
in
தமிழகம்