வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்ட சம்பவம்; பழவந்தாங்கலில் பரபரப்பு!
சென்னை பழவந்தாங்கல், ரத்னாபுரம், ரகுபதி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (49). லாரி உரிமையாளரான இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். ஆனந்தன், அதே தெருவில் கணவனைப் பிரிந்து குழந்தைகளுடன் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்துள்ளனர். நேற்றிரவு, குடிபோதையில் இருந்த ஆனந்தன், பெட்ரோல் கேனுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் வாழ வரவில்லை என்றால், பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஆனந்தன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் இருந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஆனந்தன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
in
தமிழகம்