சைதாப்பேட்டை தொழிலதிபர், சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீடுகளில் அதிரடி ரெய்டு; சிஆர்பிஎப் பாதுகாப்புடன் விசாரணை!
சென்னையில் உள்ள இரண்டு முக்கிய தொழிலதிபர்களின் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள தொழில்அதிபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை, சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, தெற்கு மாடவீதியில் வசிக்கும் தொழிலதிபர் ரஜினி ரெட்டி என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியுள்ளனர். இவர் EXEMPLARR WORLDWIDE LIMITED என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், சென்னை, புரசைவாக்கம், தம்புசாமி தெருவில் வசித்து வரும் நகைக்கடை அதிபர் லால் கோத்தாரி (மோகன்லால் கோத்தாரி) என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சவுகார்பேட்டையில் பிரபலமான நகைக்கடை வைத்திருக்கும் இவர், நிதி மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தச் சோதனைகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்தச் சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.