போதைப் பழக்கம், உல்லாச வாழ்க்கைக்காக கொள்ளை... மகாராஷ்டிரா கொள்ளையர்கள் தாம்பரத்தில் கைது!
தாம்பரம் பகுதியில் காணாமல் போன இருசக்கர வாகனம், பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான ஓ.எல்.எக்ஸில் விற்பனைக்கு இருந்ததைக் கண்டு வாகனத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொகுசு வாழ்க்கைக்காக இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா இளைஞர்கள் இருவர் சிக்கியுள்ளனர்.
தாம்பரம் அடுத்த இரும்புலியூரைச் சேர்ந்த விக்னேஷ், தாம்பரத்தில் உள்ள ஒரு மருந்துக் கடையில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை கடையின் அருகே நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றார். வேலை முடிந்து திரும்பி வந்தபோது, தனது வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வாகனம் திருடுபோன நிலையில், மற்றொரு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக விக்னேஷ் ஓ.எல்.எக்ஸ் தளத்தைப் பார்த்துள்ளார். அப்போது, தனது வாகனம் விற்பனைக்கு இருப்பதாகப் பதிவிடப்பட்டிருந்த படத்தைப் பார்த்து அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாகக் காவல் நிலையம் சென்று, அந்தப் படத்தையும், விற்பனை விளம்பரத்தையும் போலீசாரிடம் காண்பித்தார்.
இதன் அடிப்படையில், போலீசார் வாகனத்தை வாங்குவதுபோல், விற்பனைக்கு பதிவிட்ட நபரைத் தொடர்பு கொண்டனர். தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இருப்பதாகக் கூறிய அந்த நபரை, வாகன உரிமையாளர் விக்னேஷே சென்று சந்தித்தார். அப்போது, வாகனத்தின் விலை ₹50 ஆயிரம் எனக் கூறப்பட்டு, இறுதியில் ₹35 ஆயிரத்திற்குப் பேரம் பேசியுள்ளனர். விக்னேஷ் அவர்களிடம் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்கள் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார், இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா (22) மற்றும் சாகர் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் புறநகர் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைத் திருடி, ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை போதைப்பொருள் மற்றும் விலை மாதர்களுடன் உல்லாசமாகச் செலவழிப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.