கிராம மக்கள், அமைப்பினர் கடும் எதிர்ப்பு; வாக்குவாதத்தால் பாதியிலேயே கிளம்பிச் சென்ற அதிகாரிகள்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அதிகாரிகள் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி அடுத்த முத்துவயல் கிராமத்தில், ராம்நாடு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு முத்துவயல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சத்திரக்குடியில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு மற்றும் பரமக்குடி கோட்டாட்சியர் சரவணபெருமாள் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.
இதில், முத்துவயல் கிராம மக்கள், நாம் தமிழர் கட்சியினர், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். அவர்கள், மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று ஏற்படும். மேலும், நிலத்தடி நீர் மாசுபடும்" எனப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சூழல் மோசமடைந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பரமக்குடி கோட்டாட்சியர் ஆகியோர் கூட்டத்தைப் பாதியிலேயே புறக்கணித்துவிட்டுச் சென்றனர்.