பணத்தாசை பிடித்த போலீசாரால் சிக்கிய ரூ.3 கோடி... ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 4 போலீசார்!
சென்னையின் பரபரப்பான மாதவரம் பேருந்து நிலையத்தில், கோடிக்கணக்கான ஹவாலா பணத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், தாங்களே பிரித்துக்கொண்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நான்கு போலீஸ் அதிகாரிகள் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 10 நாட்களுக்கு முன்பு, மாதவரம் பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கலால் போலீசார், ஆந்திராவிலிருந்து பேருந்தில் வந்த ஒரு நபர், மூன்று கோணிப்பைகளில் இருந்த பண மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டிருந்ததைக் கண்டனர். சந்தேகம் அடைந்த போலீசார், அந்த மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பணம் ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரி மோகனுக்குச் சொந்தமானது என்றும், நகை வாங்குவதற்காக சென்னைக்குக் கொண்டு வந்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், மூட்டைகளை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போலீசார், அதில் இருந்த 3 கோடி ரூபாயில் சில லட்சங்களை மட்டும் பதிவு செய்து, மீதமுள்ள பணத்தை மோகனிடம் திரும்ப ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சென்றது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட மூன்று கோடி ரூபாயில், ஒரு பகுதி பணத்தை இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட நான்கு பேரும், மற்ற காவலர்களும் பிரித்துக்கொண்டது தெரியவந்தது. இதில் சில லட்சங்கள் மட்டுமே பிரித்து வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணம் யாருக்குச் சென்றது என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், சம்பவத்தன்று பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன்ராஜ், சதீஷ்குமார், தலைமை காவலர் சார்லஸ், காவலர் வேல்முருகன் ஆகியோர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டு, அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உரிய ஆவணங்கள் இன்றிப் பணம் கைப்பற்றப்பட்டதால், இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.