பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதால் விபரீதம்; சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
சேலம் வீராணம் அருகே, இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவி, மற்றொரு வாகனம் மோதியதில் நடுரோட்டில் விழுந்து, லாரி ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் கண்முன்னே நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது மகள் ஜீவஜோதி (13) என்பவரை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட மாணவி ஜீவஜோதி, நடுரோட்டில் விழுந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே ஜீவஜோதி உயிரிழந்தார். தந்தையின் கண்முன்னே நடந்த இந்த விபரீதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த வடிவேல் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் காட்சியாக இருந்தது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வீராணம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.