"நண்பர்களுடன் மது அருந்தியதுதான் காரணம்?" - ரோபோ சங்கர் மரணத்தின் அதிர்ச்சிப் பின்னணி!
ரசிகர்களைச் சிரிக்க வைத்த கலைஞனின் சோகமான முடிவு!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), உடல்நலக்குறைவால் காலமானார். தனது நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த அவரது திடீர் மறைவு, திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பது குறித்த அதிர்ச்சிப் பின்னணி வெளியாகி உள்ளது.
மதுரை மண்ணின் மைந்தனான ரோபோ சங்கர், ஒரு நாளைக்கு 75 முட்டை வெள்ளைக் கரு சாப்பிட்டு, கட்டுடலுடன் இருந்த ஒரு பாடி பில்டர். உடல் முழுவதும் மெட்டல் பெயிண்ட் பூசிக்கொண்டு, மேடைகளில் ரோபோவைப் போல ஆடியதால், 'ரோபோ சங்கர்' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த அவர், விஜயகாந்தின் குரலைப் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர், 'மாரி', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரோபோ சங்கர், வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் தனது உடலைக் கவனிக்காமல் உடல் எடை கூடி, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், சில மாதங்கள் தீவிர மருத்துவச் சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி வீடு திரும்பினார். அப்போது, நடிகர் தனுஷ் அவருக்குப் பெரிய அளவில் நிதியுதவி அளித்து உதவியதாக ரோபோ சங்கரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியன்று, 'காட்ஜில்லா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில் கலந்துகொண்ட ரோபோ சங்கர், அன்று மாலையே நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி, ரோபோ சங்கர் தனது பழைய உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மீண்டும் திரும்பியதே அவரது உடல்நலப் பாதிப்புக்குக் காரணம் என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவரது நெருங்கிய உறவினர்களோ, பழைய நோயின் தொடர்ச்சியாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறுகின்றனர். கமல்ஹாசனால் 'நட்சத்திரன்' எனப் பெயரிடப்பட்ட தனது பேரனைத் திரையுலகில் பெரிய இடத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற ரோபோ சங்கரின் கனவு, அவரது 46 வயதிலேயே முடிந்து போனது, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.