சட்லெஜ், பியாஸ் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; 3.5 லட்சம் மக்கள் பாதிப்பு; முதல்வர் பகவந்த் மான் உத்தரவு!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வரும் நிலையில், சட்லெஜ் மற்றும் பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர வெள்ளத்திற்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளதாகவும், சுமார் 3.5 லட்சம் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநில முதல்வர் பகவந்த் மான் அவசர உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, பஞ்சாபில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் 7-ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வெள்ளப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.