"சாட்சியே இல்லாம முடிச்சு அவன் மேல பழி போட்ருவேன்": தந்தையின் அதிர்ச்சி ஆடியோ!
காதலை ஏற்க மறுத்த குடும்பம்; காதல் ஜோடிக்கு எதிராக வெடித்த கொலை மிரட்டல் அச்சுறுத்தல்!
கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடியைத் திருமணம் செய்துகொண்டதால், பெண்ணின் தந்தை, "சாட்சியே இல்லாம முடிச்சு அவன் மேல பழி போட்ருவேன்" எனக் கொலை மிரட்டல் விடுத்த அதிர்ச்சியூட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. தொடர் மிரட்டல்களால் அச்சமடைந்த அந்த இளம் தம்பதியினர், காவல்துறையில் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டுப் புகாரளித்துள்ளனர்.
பொள்ளாச்சி, பழனியாண்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பவிப்பிரியா. எம்.சி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது, தனியார் பேருந்து நடத்துநராக இருந்த சேதுபதி என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறி, நான்கு ஆண்டுகளாக நீடித்துள்ளது. தங்கள் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பவிப்பிரியா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று சம்மதம் பெற முயன்றபோது, அவரது பெற்றோர் கடுமையாகத் தாக்கி, வீட்டில் சிறை வைத்துள்ளனர். அப்போது, "எங்களது விருப்பத்தை மீறி ஏதாவது செய்தால், இரவோடு இரவாகத் தூக்கில் தொங்க விட்டுவிடுவோம்" என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பவிப்பிரியா காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை மீட்குமாறு புகார் அளித்துள்ளார். போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பவிப்பிரியா தனது காதலனுடன் செல்வதாக உறுதியாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர் இனி அவரது வாழ்க்கையில் தலையிடக் கூடாது என எழுதி வாங்கப்பட்டது. ஆனால், தம்பதியினர் சேதுபதியின் வீட்டிற்குச் சென்றால் பிரச்சனை செய்வார்கள் என வேறு இடத்தில் தங்கி வந்துள்ளனர். அப்போது, பவிப்பிரியாவின் தந்தை முருகேசன், "சந்தேகமே வராததுபோல உன் கதையை முடித்துவிட்டு, உன் கணவன் மீது பழி போட்ருவேன்" என மிரட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பவிப்பிரியாவின் உறவினர்கள் சேதுபதியின் வீட்டிற்குச் சென்று, இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிச் சென்றுள்ளனர். மேலும், சேதுபதியின் தம்பியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், தம்பதியினர் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரிப் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து விசாரித்தபோது, முருகேசன், "போதையில் அப்படி பேசிவிட்டேன். எனது மகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என எழுதி கொடுத்துள்ளார். அண்மையில், மயிலாடுதுறையில் நடந்த காதல் கொலை போல எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதால், இந்தத் தம்பதியினருக்குப் போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.