"நான் சர்வதேச கூலியா?": நடிகர் கேபிஒய் பாலா உருக்கம்!
ஆம்புலன்ஸ் விவகாரத்தில் விமர்சனம்; விளக்கமளித்து மனம் திறந்த நடிகர்!
சென்னை: தனது ஆம்புலன்ஸ் விவகாரம் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு, "நான் சர்வதேச கூலியல்ல, தினக்கூலி" என்று நடிகர் கேபிஒய் பாலா உருக்கமான விளக்கத்தை அளித்துள்ளார். தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் மட்டுமே சமூக சேவைகளைச் செய்து வருவதாகவும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில், நடிகர் கேபிஒய் பாலா பல்வேறு அவசரத் தேவைகளுக்காக ஆம்புலன்ஸ்களை வழங்கியிருந்தார். அப்போது, அந்த ஆம்புலன்ஸின் நம்பர் பிளேட்டில் ஒரு எழுத்து தவறாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸை மாற்றி, புதிய ஆம்புலன்ஸை வழங்கினார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது குறித்துப் பேசிய பாலா, "ஆம்புலன்ஸின் நம்பர் பிளேட்டில் ஒரு எழுத்து தவறாக இருந்ததை அறிந்தவுடன் உடனடியாக மாற்றி வேறு ஆம்புலன்ஸ் வழங்கிவிட்டேன். அந்த ஆம்புலன்ஸ் மூலம் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால், அந்த நல்ல விஷயங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை" எனக் கவலையுடன் தெரிவித்தார்.
"என் சொந்த உழைப்பில்தான் கார் வாங்கினேன். பல பேர் சொல்வதுபோல அது போலியான எண் கொண்டது அல்ல. என்னைச் சர்வதேச கூலி என விமர்சிக்கின்றனர். ஆனால், நான் தினக்கூலி. எனது சொந்த சம்பாத்தியத்தில் கிடைத்த வருமானத்தில் மட்டுமே சமூக உதவிகளைச் செய்கிறேன். மக்கள் எனக்குத் துணையாக நிற்கும்வரை தொடர்ந்து சேவை செய்வேன்" என்றார்.
மேலும், அடுக்குமாடி வீடு அல்லது ஆடம்பர கார் வாங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அதே இடத்தில் ஒரு சிறிய கிளினிக் கட்ட முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.