தேர்தல் ஆணையத்தின் கடிதம் உண்மையானதா? என்ற கேள்வி எழுப்பியதுடன், 'போலியான முகவரிக்குச் சென்றது எனக் குற்றச்சாட்டு!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மற்றும் தலைவராக மருத்துவர் ராமதாஸ் இருக்கும்போது, அன்புமணி ராமதாஸுக்கு தேர்தல் ஆணையத்தின் கடிதம் எப்படி வழங்கப்பட்டது என்றும், அந்தக் கடிதம் உண்மையானதா என்றும், பாமக சமூக ஊடகப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தலைவர் பதவி சர்ச்சை
கடந்த 28-05-2025 அன்று அன்புமணி ராமதாஸ் மற்றும் பிற பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட சோழன் குமார் வாண்டையார், அடுத்த நாள் (29-05-2025) நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில், பொதுக்குழு கூடி புதிய தலைவரை நியமிக்கும் வரை மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தற்காலிகத் தலைவராகத் தொடர்வாரென அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மே மாதம் 25-ஆம் தேதி பதவிக்காலம் முடிந்த ஒருவர், ஒரு பொதுக்குழுவைக் கூட்டி, அதன் அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு தனது பதவியை நீட்டிப்பு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டது நகைப்புக்குரியது என்றும், தேர்தல் ஆணையமும் எப்படி அத்தகைய நீட்டிப்பு வழங்கியது என்பது தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் கடிதம் குறித்து சந்தேகம்
பாமகவின் பழைய தலைமை அலுவலக முகவரியான '63, நாட்டு நாயக்கன் தெரு, வன்னியர் தேனாம்பேட்டை' என்பதை, நம்பர் 10, தி.நகர் என மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும், அந்த அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தின் கடிதம் தி.நகர் முகவரிக்குச் சென்றுள்ளது என்றும் சோழன் குமார் வாண்டையார் கூறினார்.
போலியாக மாற்றப்பட்ட ஒரு முகவரிக்கு அக்கடிதம் தவறுதலாகச் சென்றுள்ளது. மருத்துவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் நீட்டிப்பு கடிதம் எப்படி வழங்கப்பட்டது என்பதுதான் கேள்வி என்று அவர் கூறினார். மேலும், அந்தக் கடிதம் உண்மையானதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார். வழக்கமாகத் தேர்தல் ஆணையத்திலிருந்து வரும் கடிதங்களில் இருக்கக்கூடிய லோகோ, இந்தக் கடிதத்தில் இல்லை என்றும், இது குறித்து விரைவில் மருத்துவர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை அணுகி உரிய தீர்வு காண்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் பாலு குறித்துப் பேசிய சோழன் குமார், வழக்கறிஞர் பாலு பொய் சொல்வதில் வல்லவர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், போலியாக ஒரு கடிதத்தை இன்று வெளியிட்டு ஊடகத்தின் வாயிலாகப் பேசியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.