குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால் ஜாமீன் மனு தள்ளுபடி; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென மூர்த்தி குற்றச்சாட்டு.
கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்துச் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துப் பதிவிட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி, சென்னை டிஜிபி அலுவலகம் அருகே விசிக-வினரால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர். விசிக-வினர் அளித்த புகாரின் பேரில், ஆபாசமாகப் பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் மெரினா போலீசார், 'ஏர்போர்ட்' மூர்த்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மூர்த்தி தரப்பு வாதம்
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏர்போர்ட் மூர்த்தி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை முதலில் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு எதிராக மட்டுமே காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், 'ஏர்போர்ட்' மூர்த்தி ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரெனக் குறிப்பிட்டு, அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.