நிலத்தகராறு விவகாரத்தில் பதற்றம்... தீக்குளிக்க முயன்ற நபர் கைது!
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே நிலத் தகராறு தொடர்பான செய்தியைச் சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் செல்போனை, செய்யூர் காவல் ஆய்வாளர் பாபு தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர், திருவத்தூரைச் சேர்ந்த உதயகுமாருக்குச் சொந்தமான நிலம் தொடர்பாக, லோகநாதன் என்பவருடன் தகராறு இருந்து வந்தது. இந்த நிலம்குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற அனுமதியைப் பெற்று லோகநாதன் கட்டடம் கட்ட முயன்றபோது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, அவரது மகன், உறவினர்கள் ஆகியோர் லோகநாதனுக்கு ஆதரவாகச் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, போலீசார் உதயகுமாரைக் கைது செய்ய முயன்றனர். இதனையடுத்து, அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர், காவல் ஆய்வாளர் பாபு, உதயகுமார் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கி அவர்களைக் கைது செய்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, காவல் ஆய்வாளர் பாபு, அவரது செல்போனைத் தட்டிவிட்டுச் சென்றார். போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.