₹188 கோடி மோசடி வழக்கில் அதிரடி உத்தரவு; பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்குமா?
நிதி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விரைந்து பறிமுதல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சொத்துக்களை அடையாளம் காணும் பணியை விரைந்து முடிக்க மதிப்பீட்டுக் குழுவிற்கு விசாரணை அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் 2023, ஜூன் 20-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதுவரை, 14,540 புகார்களின் அடிப்படையில் ₹188.29 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட தேவிகுமார் உட்பட 17 பேர், நியோமேக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான திருச்சி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நிலங்களை உடனடியாகப் பறிமுதல் செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்தார்.
அப்போது, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், சொத்துக்களை அடையாளம் காணும் பணி விரைவில் முடிவடையும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறும் வகையில், நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், சொத்துக்களை அடையாளம் காணும் பணியை விரைந்து முடிக்க மதிப்பீட்டுக் குழு மற்றும் துணைக்குழுவுக்கு விசாரணை அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் வலியுறுத்தினார்.