பிரிகேட் மக்ரோன் ஒரு பெண் என்பதை நிரூபிக்க, அறிவியல் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் - வழக்கறிஞர் டாம் கிளாரே தகவல்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிகேட் மக்ரோன், பிரிகேட் ஒரு ஆண் என்ற வதந்தியைப் பரப்பிய அமெரிக்க பாட்காஸ்டர் கேண்டஸ் ஓவன்ஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், தங்கள் தரப்பு கூற்றை நிரூபிக்க அமெரிக்க நீதிமன்றத்தில் அறிவியல் மற்றும் புகைப்பட ஆதாரங்களை" சமர்ப்பிக்கத் தயாராகி வருகின்றனர்.
பிபிசியின் ஃபேம் அண்டர் ஃபயர் பாட்காஸ்டில் இது குறித்துப் பேசிய மக்ரோன் தம்பதியரின் வழக்கறிஞர் டாம் கிளாரே, இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பிரிகேட் மக்ரோனுக்கு மிகவும் வருத்தமளிப்பதாக இருப்பதாகவும், இது ஜனாதிபதிக்கும் ஒரு “திசைதிருப்பலாக” இருப்பதாகவும் கூறினார். ஒருவர் தனது வாழ்க்கையையும், குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும்போது, அவரது குடும்பத்தினர் தாக்குதலுக்கு உள்ளானால், அது அவருக்குச் சோர்வை ஏற்படுத்தும். அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதால், அதற்கு அவர் விதிவிலக்கு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வதந்தியை முறியடிப்பதற்காக, நிபுணர் சாட்சியங்கள் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்க பிரிகேட் உறுதியாக இருக்கிறார் என்று வழக்கறிஞர் கிளாரே உறுதிப்படுத்தினார். இந்த வகையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பது மிகவும் வருத்தமளித்தாலும், சரியானதை நிலைநாட்ட என்ன தேவையோ அதைச் செய்ய அவர் உறுதியாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.