"நான் மூன்றரை கோடி ரூபாய் கடனில் இருக்கிறேன்": அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
"சம்பளம் வாங்காமல் விவசாய நிலம் வாங்கினால் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?" - எதிர்க்கட்சிகளுக்கு அண்ணாமலை பதிலடி!
சென்னை: "நான் மக்களின் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்கூட சம்பளமாக வாங்கியது இல்லை. ஆனால், சொந்தமாகச் சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? நான் மூன்றரை கோடி ரூபாய் கடனில் இருக்கிறேன்," என எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
தனது விவசாய நிலம் வாங்கியது தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அண்ணாமலை, "நான் சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது பஞ்சாயத்துத் தலைவரோ அல்ல. மக்களின் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்கூட எனக்குச் சம்பளம் கிடையாது. ஆனாலும், எனது வங்கிக் கணக்கை நான் வெளியிடுகிறேன். நான் சொந்தமாகச் சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால், அதற்கு ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "நான் சந்தை மதிப்பைவிட அதிகமான விலைக்கு அதிகாரப்பூர்வமாக அந்த நிலத்தை வாங்கியுள்ளேன். அரசுக்கு முறையாக வரியும் கட்டியுள்ளேன். இயற்கை விவசாயம் செய்வதற்காகவே அந்த நிலத்தை நான் வாங்கியுள்ளேன். நான் சம்பாதிக்கக் கூடாதா? எனக்கும், எனது மனைவி, குடும்பத்தினருக்கும் வேலைகள் உள்ளன. நாங்கள் அதைச் செய்துகொண்டிருக்கிறோம். என்னுடைய 10 ஆண்டு வங்கிக் கணக்கை கடந்த ஆண்டு வெளியிட்டேன். அடுத்த ஆண்டு வருமான வரியை தேர்தல் நேரத்தில் வெளியிடுவேன்" என்று தெரிவித்தார்.
"நான் மூன்றரை கோடி ரூபாய் கடனில் இருக்கிறேன். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை," எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.