கோவை, மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்றவர் மீது கடும் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கோவையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் சுகாதாரத்திற்குப் பாதகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி, மேட்டுப்பாளையம் பகுதியில் 6 கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முனீர் (24) என்பவரைப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முனீர், கஞ்சா விற்பனை மூலம் பொது ஒழுங்கு மற்றும் சுகாதாரத்திற்குப் பாதகமான செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், முனீர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான நகலை காவல்துறையினர் முனீரிடம் வழங்கினர்.