புகழ்பெற்ற புண்ணியத் தலத்தில் சாலைகள் சேதம், சுகாதார சீர்கேடு; உடனே நடவடிக்கை எடுக்க யாத்திரிகர்கள் கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற தீர்த்தாண்டதானம் கடற்கரையில், மகாலய அமாவாசையை முன்னிட்டு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு, முன்னோர்களுக்குப் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.
பக்தர்கள், குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். வரலாற்றுப் புகழ்மிக்க சகல தீர்த்தம் உடைய ஈஸ்வரர் ஆலயமும், ராமபிரான் வழிபட்டதாகக் கூறப்படும் சிறப்புமிக்க இந்தக் கடற்கரையும், புனித நீராடலுக்கும், தர்ப்பணம் செய்வதற்கும் ஏற்ற இடமாகத் திகழ்கிறது.
இருப்பினும், இந்த ஆண்டு மகாலய அமாவாசைக்கு வந்த யாத்திரிகர்கள் கடுமையான சிரமங்களைச் சந்தித்தனர். கடற்கரைக்குச் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்படாததால், அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசியும் காணப்பட்டது. உடை மாற்றுவதற்கான அறைகள், கழிப்பறை வசதிகள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகிறார்கள். ஆனால், எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படுவதில்லை. சாலை வசதி, கழிப்பறை, உடைமாற்றும் அறை போன்றவற்றை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்" எனப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் எப்போது தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.