5 ஆண்டுகளாகத் தொடரும் பணி; முகூர்த்த நாட்களில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து!
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தாமதமாவதால், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், உயர்மட்டப் பாலங்கள் முழுமையடையாமல் உள்ளன.
இதனால், வாகனங்கள் பொன்னேரிக்கரை, ராஜகுளம் போன்ற இடங்களில் உள்ள சர்வீஸ் சாலைகளுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. குறுகிய இந்தச் சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் பல மணி நேரம் ஸ்தம்பித்து நிற்கின்றன. குறிப்பாக, முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நிலைமை மேலும் மோசமடைகிறது.
வாகன நெரிசலால், காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்ல வழக்கமாக ஆகும் நேரத்தைவிட, தற்போது 3 மணி நேரம் வரை ஆவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏனாத்தூர் முதல் வெள்ளைகேட் வரையிலான பகுதியில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.
நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் அவதியைத் தீர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.