இளைஞர்களைக் குறிவைத்து விற்பனை; போலீசார் அதிரடி நடவடிக்கை!
கோயம்புத்தூர், கோவில்பாளையம் அருகே இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்ற பெண் உள்பட ஆறு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவில்பாளையம், கீரணத்தம் லட்சுமி கார்டன் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதருக்குள் மறைத்து வைத்து, இளைஞர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட லோகநாதன் (22), முகமத் அன்பாஸ் (24), அகமது பக்ருதீன் (20), மணிகண்டன் (25), விக்னேஷ் (20) மற்றும் ஒரு பெண் என மொத்தம் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.