பாராட்டு விழாவில் இருவரும் என் சிம்பொனி குறித்துப் பேசாதது சிறு உறுத்தலாக இருந்தது!
தான் பங்கேற்ற பாராட்டு விழா குறித்துப் பேசிய இசைஞானி இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தமக்குச் சிறந்த பாடல்கள் போட்டுள்ளேன் என்று மாறி மாறிச் சொன்னதைக் குறிப்பிட்டு, இருவருக்குமே நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டதாகக் கலகலப்புடன் தெரிவித்துள்ளார்.
பாராட்டு விழா மேடையில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். விழா குறித்துப் பேசிய இளையராஜா, அவர்கள் இருவரும் எனது சிம்பொனி பற்றியோ, எங்களின் 50 வருட திரையுலக வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றியோ எதுவும் சொல்லாதது எனக்குச் சிறு விஷயமாக (உறுத்தலாக) இருந்தது. இருப்பினும் அவர்கள் ரசிகர்களை மகிழ்வித்தனர் என்று கூறினார்.
தொடர்ந்து, இரு நடிகர்களுக்கும் இடையே நடந்த நகைச்சுவையான உரையாடலைப் பற்றிப் பேசிய அவர், கமல்ஹாசனுக்கே நான் சிறந்த பாடல்கள் போடுவதாகப் பல மேடைகளில் ரஜினி சொல்வார். அதேபோல, கமலும் வேறு மேடைகளில் ரஜினிக்கே நான் சிறந்த பாடல்களைப் போடுவதாகச் சொல்வார் என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம், இருவருக்குமே நான் நல்ல பாடல்களைப் போட்டுள்ளேன் என்பது நிரூபணமாகிவிட்டது என்று இசைஞானி இளையராஜா புன்சிரிப்புடன் தெரிவித்தார்.