நடிகை ஊர்வசி ரௌடேலாவுக்கும் அழைப்பு; 1xBet செயலி குறித்து விசாரணை!
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்கரவர்த்தி மற்றும் நடிகை ஊர்வசி ரௌடேலா ஆகியோரை அமலாக்கத்துறை (ED) விசாரணைக்கு அழைத்துள்ளது.
1xBet என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், நிதி மோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்காக, முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். நடிகை ஊர்வசி ரௌடேலா செவ்வாய்க்கிழமை ஆஜராவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய அரசு ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதித்தது. சந்தை ஆய்வு நிறுவனங்களின் தகவல்படி, இந்தியாவில் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி ஆகும். இதில், 11 கோடிப் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட சந்தையின் மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்றும், இது 30 சதவீத வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2025 ஜூன் மாதம் வரை, ஆன்லைன் சூதாட்ட செயலிகளை முடக்குவதற்கு 1,524 உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.