அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கலாய்த்த அரியலூர் மூதாட்டி!
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்த நாகம்பந்தல் கிராமத்திற்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேருந்து வசதி கிடைத்த மகிழ்ச்சியில், அமைச்சரிடம் ஒரு மூதாட்டி நகைச்சுவையாகப் பேசிய சம்பவம் அப்பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த நாகம்பந்தல் கிராமத்தில் மகளிர் விடியல் பேருந்து பயணத்தை துவக்கி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வருகை தந்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அமைச்சரிடம், பஸ் இல்லைனு எங்க ஊருக்கு டீச்சருங்கலாம் வர மாட்டேங்குறாங்க. இனிமேல் வரலைன்னா தொலைச்சிடமாட்டேன் என்று கூறினார். மேலும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை தங்களுடன் பேருந்தில் பயணிக்க அழைப்பு விடுத்தார். ஆனால், அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் இருப்பதால் அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால், அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றிய காட்சி அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும், அங்கு வந்த ஒரு நபர், மெயின் ரோட்டில் செல்லும் சேலம் பஸ் நிற்க மாட்டேங்குது என்று அமைச்சரிடம் புகார் கூறினார். அதற்கு, "சேலம், சென்னை போன்ற ஓட்டுநர்கள் 300, 400 கி.மீ.க்கு மேலாகக் கஷ்டப்பட்டு பேருந்தை ஓட்டி வருகின்றனர். அவர்களுக்குக் கால் அசந்துவிடும். 5 கி.மீ.க்கு ஒரு இடத்தில் ஸ்டாப் கேட்டால் அவர்கள் எப்படி பேருந்தை ஓட்டுவர்" என்று அமைச்சர் பதிலளித்தார்.
அதேபோல், அமைச்சர் சிவசங்கருக்கு இளநீர் குடிக்கக் கொடுத்தபோது, வரும் வழியில் ஒருவர் என்னை அடிச்சு, இளநீர் குடிக்கச் சொன்னாருனு குடிச்சுட்டு வந்தேன் என்று அமைச்சர் கூறினார். ஆனால், பொதுமக்கள் வற்புறுத்தவே வேறு வழியின்றி இளநீரைக் குடித்துவிட்டு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.