4 1/2 அடி உயரத்துடன் அரிதாகக் கிடைத்த மீன்; ஆர்வத்துடன் பார்த்த மக்கள்!
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே, 36 கிலோ எடை மற்றும் 4 1/2 அடி உயரம் கொண்ட அரிய வகை மயில்கோலா மீன் மீனவர்களின் வலையில் சிக்கியது. இந்த மீனின் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்களின் வலையில் எடை மிகுந்த ஒரு மீன் சிக்கியுள்ளது. கரைக்குக் கொண்டு வந்து பார்த்தபோது, அது 36 கிலோ எடை கொண்ட ஒரு ராட்சச மயில்கோலா மீன் எனத் தெரியவந்தது. இதன் உயரம் சுமார் 4 1/2 அடி இருந்தது.
மயில்கோலா மீன் பொதுவாக இந்த அளவுக்குப் பெரியதாகக் கிடைப்பது அரிதானது என்பதால், அதனைக் காண அப்பகுதி மக்களும், பிற மீனவர்களும் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த மீனின் எடை மற்றும் உயரம் பலரையும் கவர்ந்துள்ளது.