நெல்லை-ராமேஸ்வரம் வழித்தட பஸ்ஸில் அலட்சியம்; டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திருநெல்வேலியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர், செல்போனில் பேசிக்கொண்டே கவனக்குறைவாகப் பேருந்தை இயக்கிய சம்பவம் பயணிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக ஓட்டுநர் ஒரு கையில் செல்போனையும், மற்றொரு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக்கொண்டு, சாலையைச் சரிவரக் கவனிக்காமல் அதிவேகமாகப் பேருந்தை ஓட்டியுள்ளார். ஓட்டுநரின் இந்த அலட்சியமான செயலை, பேருந்தில் பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ள நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநரின் இந்தப் பொறுப்பற்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது எனப் பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக நடந்துகொண்ட ஓட்டுநர் மீது போக்குவரத்துத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
