2017 தீ விபத்து நடந்த அதே கடையில் விழிப்புணர்வு ஒத்திகை; வடகிழக்குப் பருவமழைக்கும் தயார் என தீயணைப்புத்துறை உறுதி!
கடந்த 2017-ஆம் ஆண்டு மிகப்பெரிய தீ விபத்து நிகழ்ந்த சென்னை தி.நகரில் உள்ள தனியார் துணிக்கடையில், இன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தத்ரூபமான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையைத் தமிழக தீயணைப்புத்துறை டிஜிபி **சீமா அகர்வால்** நேரில் பார்வையிட்டார்.
கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அலாரம் ஒலியைக் கேட்டு ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும், தீயில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் எவ்வாறு விரைந்து மீட்பார்கள் என்பது குறித்தும் இந்த ஒத்திகை நடைபெற்றது. மேலும், தீயை உடனடியாக அணைக்க தீத்தடுப்பான் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சீமா அகர்வால், தீபாவளிப் பண்டிகைக்காகப் பல இடங்களில் விழிப்புணர்வு ஒத்திகைகளை நடத்தி வருகிறோம். பட்டாசுக் கடைகளுக்கான தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் கடைகளுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். மேலும், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளத் தீயணைப்புத் துறை தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.