துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்புடன் ரெய்டு; அரசியல் தலைவர்களுக்குப் பினாமி என விசாரணை\!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை தொழிலதிபர் ராமகிருஷ்ண ரெட்டி மற்றும் நகைக்கடை அதிபர் மோகன்லால் காத்ரி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனைகள் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றன.
சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி தெற்கு மாடவீதி பகுதியில் வசித்து வரும் ராமகிருஷ்ண ரெட்டி, ‘மார்க் குரூப் ஆஃப் கம்பெனி’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட், கட்டுமானம், இசைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவரும் அவரது மனைவி ரஜினி ரெட்டியும் இணைந்து, 2020ஆம் ஆண்டு மூன்று முறை வங்கியில் ₹193 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. வங்கிக் கடனில் பெறப்பட்ட பணத்தை வீடு கட்டும் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், ரஜினி ரெட்டி நடத்தி வந்த நிறுவனத்திற்குச் செலவழித்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல், பணமதிப்பிழப்பின்போது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ₹1673 கோடியிலிருந்து ₹115 கோடியை, ராமகிருஷ்ண ரெட்டி ஓ.எம்.ஆர். சாலையில் நிலம் வாங்குவதற்குப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இவர் சில அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பினாமியாகச் செயல்பட்டு வருவதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல, சென்னை புரசைவாக்கம், தம்புசாமி தெருவில் வசித்து வரும் நகைக்கடை அதிபர் மோகன்லால் காத்ரி என்பவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் சவுகார்பேட்டை பகுதியில் தங்க நகைகளின் மொத்த வியாபாரத்தைச் செய்து வருகிறார். சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017ஆம் ஆண்டும் ராமகிருஷ்ண ரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சோதனையின் முடிவில், கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள், மற்றும் மோசடி குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.