மங்கலம் அருகே நடந்த சோகமான சம்பவம்; விபத்து ஏற்படுத்திய தலைவரிடம் போலீசார் விசாரணை!
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே போதையில் கார் ஓட்டிச் சென்ற திமுகவைச் சேர்ந்த சாமாளாபுரம் பேரூராட்சித் தலைவர் ஒருவரின் கார் மோதியதில், முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமாளாபுரம் பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமி என்பவர் போதையில் காரை ஓட்டிச் சென்றபோது, சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 57 வயது பழனிசாமி மீது மோதியுள்ளார். இந்த மோதலில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.