உறங்கிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட குழந்தை; கடத்திய நபர் கைது!
சேலத்தில் 5 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை, காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த மதுரை (22) என்பவர், தனது மனைவி மற்றும் 9 மாத குழந்தையுடன் அழகாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் அடியில் தங்கி, கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவு, இந்தத் தம்பதி உறங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.
அதிகாலை விழித்துப் பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்து, மதுரை உடனடியாக அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, குழந்தையைக் கடத்திச் சென்ற ரமேஷ் என்பவரைக் கைது செய்தனர். பின்னர், குழந்தையைப் பத்திரமாக மீட்டு, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.