தாமிரம், லித்தியம் உள்ளிட்ட 30 வகை கனிமங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி விரைவுபடுத்த நடவடிக்கை!
தாமிரம், நிக்கல், கிராபைட் உள்ளிட்ட 30 வகை கனிமங்களைச் சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறும்போது, மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தத் தேவையில்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சகம், நாட்டில் கிடைக்கும் கனிமங்களை முக்கியமானவை மற்றும் அணுக்கனிமங்கள் என வகைப்படுத்தியுள்ளது. இந்த கனிமங்கள் இருக்கும் இடங்களைக் கண்டறியவும், வெட்டி எடுக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் இயக்குநர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக்கனிமங்களை எடுக்கும் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிப்பதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாரிக்க, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, 24 வகை முக்கிய கனிமங்கள் மற்றும் 6 வகை அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டங்களுக்குப் பொருந்தும். இந்த நடவடிக்கை, கனிமத் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
