பிளேட் வைப்பதற்கு ரூ.6,000 லஞ்சம் கேட்டதாகப் புகார்; தலைமை மருத்துவர் விசாரணைக்கு உத்தரவு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில், விபத்தில் கால் முறிந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, பிளேட் வைப்பதற்கு மருத்துவமனை ஊழியர் ₹6,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்த வீடியோவில், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், விபத்தில் கால் முறிந்த சிறுவனின் உறவினரிடம் பிளேட் வைப்பதற்காகப் பணம் கேட்பது பதிவாகியுள்ளது. எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவரின் உதவியுடன்தான் அந்த ஊழியர் லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.