பணவீக்க அறிக்கை மற்றும் பொருளாதார மந்தநிலையே முக்கியக் காரணங்கள்!
கனடாவின் மத்திய வங்கி, வரும் புதன்கிழமை (செப். 17) அன்று தனது வட்டி விகிதக் கொள்கை குறித்த முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது. நாட்டின் பொருளாதார மந்தநிலை மற்றும் வலுவிழந்து வரும் வேலைவாய்ப்புச் சந்தை ஆகியவற்றின் காரணமாக, வட்டி விகிதத்தை 2.5 சதவீதம் ஆகக் குறைக்க வாய்ப்புள்ளதாக நிதிச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மத்திய வங்கி தனது முடிவை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கத் தரவைக் கனடா புள்ளியியல் துறை வெளியிடும். ஆகஸ்ட் மாதத்தில் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பணவீக்க விகிதம் 1.7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட வேலைகள் இழந்ததால் வேலையின்மை விகிதம் 7.1 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதார பலவீனத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகும்.
அதேபோல், அமெரிக்கப் பொருட்களுக்கான எதிர் வரியைக் கனடா அரசு திரும்பப் பெற்றதும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்றும், இது மத்திய வங்கிக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான கூடுதல் நம்பிக்கையை அளிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிறுவனத்தின் கனடா பொருளாதார இயக்குநர் டோனி ஸ்டில்லோ, இந்த மாதம் வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைப்பு இருக்கும் என்றும், அதைத் தொடர்ந்து அக்டோபரில் மேலும் ஒரு குறைப்பு நிகழும் என்றும் கணித்துள்ளார். இதன் மூலம், வட்டி விகிதம் 2.25 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிடி எகனாமிக்ஸ் மற்றும் கேபிடல் எகனாமிக்ஸ் போன்ற பிற நிறுவனங்களின் அறிக்கைகளும், வலுவிழந்து வரும் வேலைச் சந்தையின் காரணமாக வட்டி விகிதக் குறைப்புக்கு ஆதரவாக மத்திய வங்கி முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன.