பயோமெடிக்கல் நிறுவனத்தில் அனல் பறந்த நடவடிக்கை... குற்றவாளிகளுக்கு கிடுக்கிப்பிடி!
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பொத்தையடி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 975 கிலோ கஞ்சா மூட்டைகள் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையாளர் முனைவர். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தல்லாகுளம், செல்லூர், எஸ்.எஸ். காலனி, கீரைத்துறை, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில், 158 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் இவை. நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், இந்த கஞ்சா பொட்டலங்கள், பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த கஞ்சாவின் மொத்த எடை 975 கிலோ என்றும், இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில், மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகர காவல் ஆணையாளர் (வடக்கு) அனிதா, காவல் உதவி ஆணையாளர் சக்திவேல், தடய அறிவியல் துறை நிபுணர் வித்தியாராணி, நாங்குநேரி டி.எஸ்.பி தர்ஷிகா மற்றும் விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் பிரேமா ஆகியோர் உடனிருந்து கஞ்சா எரிப்புப் பணிகளைக் கண்காணித்தனர்.