திருப்பத்தூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு; 7 பேர் ஜாமீனில் விடுதலை!
ஆம்பூர் கலவர வழக்கில் திருப்பத்தூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த 7 பேரின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2015-ஆம் ஆண்டு, ஆம்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 191 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேர் குற்றவாளிகள் எனத் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு 3 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 22 பேரில் 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில், ஃபயாஸ் அகமது உட்பட 4 பேரின் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தது. தற்போது, மேலும் 7 பேரின் சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு, அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 11 பேரும், அவர்களது மேல்முறையீட்டு மனுக்களுக்கான விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர்.