சரக்கு மிதவைக் கப்பலில் நடந்த சோகம்; விஷ வாயு தாக்கியதால் விபத்து!
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், சரக்கு ஏற்றிச் செல்லும் மிதவைக் கப்பலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட மூன்று பேர், விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், சரக்குகள் ஏற்றிச் செல்லும் மிதவைக் கப்பல் ஒன்று சுத்தம் செய்யும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இதில், இன்று காலை மூன்று தொழிலாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கப்பலில் தேங்கியிருந்த கழிவுகளில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி, மூச்சு திணறி மயங்கினர்.
உடனடியாக அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் விரைந்து சென்று மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் மூவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் வடமாநிலத் தொழிலாளர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.