திங்கட்கிழமை தீபாவளி; ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் 4 நாள் பிரேக்!
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்குமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வழக்கம்போல, அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து, அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது.
கடந்த காலங்களில், பண்டிகை காலங்களில் மக்களின் பயண வசதிக்காக, முக்கிய விடுமுறை நாட்களுக்கு அடுத்த நாளையும் தமிழக அரசு விடுமுறையாக அறிவிப்பது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டால், தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.
இதனால், நீண்ட தூரம் பயணம் செய்ய உள்ளவர்கள் மற்றும் வெளியூர்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட இது மிகவும் வசதியாக இருக்கும் என்பதால், அரசு விடுமுறை அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.