பூங்காவுக்கு அழைத்துச் சென்று தந்திரமாக நகையை அபகரித்த நபர் கைது; ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலம்!
சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த அக்கவுண்டன்ட் பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்ள மேட்ரிமோனி வெப்சைட்டில் தனது சுயவிவரத்தைப் பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற நபர், செல்போன் மூலம் அப்பெண்ணுடன் பழகி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பேசி வந்துள்ளார். இதை நம்பிய அப்பெண், சுரேஷ்குமாரை வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள பூங்காவிற்கு காரில் சந்தித்துள்ளார். அப்போது, அப்பெண் அணிந்திருந்த செயின் அழகாக இருப்பதாகக் கூறி அதை வாங்கிப் பார்த்த சுரேஷ்குமார், தந்திரமாக அந்தப் பெண்ணைக் குளிர்பானம் வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.
அப்பெண் திரும்பி வந்து பார்த்தபோது, சுரேஷ்குமார் காரில் ஏறித் தப்பிச் சென்றுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், உடனடியாகத் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையில், சுரேஷ்குமார் மீது ஏற்கெனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.