மொத்தம் 44 பேர் கைது; ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற, நட்சத்திர ஹோட்டல்களில் நாடகமாடிய கும்பல்; பேராசைக்காரர்கள் உஷார்!
இரிடியம் முதலீட்டின் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்த விவகாரத்தில், இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட சமூக சேவகர் உள்ளிட்ட 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ரிசர்வ் வங்கி மூலமாக ஒரு கோடி ரூபாய் கிடைக்கும்'' என்று மோசடிக் கும்பல், தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்துள்ளது. விலைமதிப்பற்ற இரிடியம் உலோகத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும், அதற்கான கோடிக்கணக்கான தொகையைப் பெறுவதற்கு வரி என்ற பெயரில் பணம் தேவைப்படுவதாகவும் கூறி, போலியான ஆவணங்களைக் காட்டி பல கோடி ரூபாயை இந்தக் கும்பல் மக்களிடம் வசூலித்துள்ளது.
இந்த மோசடி குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் ஏற்கெனவே 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 43 இடங்கள் உட்பட மொத்தம் 47 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சாமிநாதன் மற்றும் அவரது மனைவி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையில் பணம், டிஜிட்டல் ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முதலீட்டாளர்களை நம்ப வைப்பதற்காக, தங்களை ஆர்பிஐ அதிகாரிகள் போல நடித்து, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் கிளைகளுக்கும் அழைத்துச் சென்று நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
பேராசை ஆபத்து!
பொதுமக்கள் அரசு வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். 'ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி கொடுப்பார்கள்' போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி, பேராசையின் காரணமாக இது போன்ற மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாமெனச் சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.