"திமுக மீதான வெறுப்பே த.வெ.க.வின் கொள்கை" - திருமாவளவன்
எம்.ஜி.ஆர். பற்றி நான் பேசியதும் எகிறி குதித்தவர்கள். இப்போது வாய் முடி கொண்டு இருக்கிறார்கள் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசின் மழைக்காலக் கூட்டத்தொடர், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசினார்.
மத்திய அரசின் புதிய சட்டங்கள் பாசிசத்தின் உச்சம்
மழைக்காலக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழிக்கும் மோசமான சட்டங்கள் என திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். "30 நாட்கள் விசாரணை கைதியாக இருந்தால் கூட, பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் போன்றோரை பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற சட்ட மசோதாவை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால், அது நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது பாசிசத்தின் உச்சம். ஏற்கனவே சி.ஏ.ஏ. போன்ற சட்டங்களை நிறைவேற்றிய பாஜக, அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது பாசிச தாக்குதலைத் தொடுத்துள்ளது" என்று அவர் கூறினார். மேலும், தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
"திமுக எதிர்ப்பு மட்டுமே த.வெ.க.வின் அரசியல்!"
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இரண்டாவது மாநில மாநாடு குறித்துப் பேசிய திருமாவளவன், "அது வெற்று கூச்சலுக்கும் ஆரவாரத்துக்கும் அடையாளமாக இருந்தது. உருப்படியான கொள்கை கோட்பாடோ, ஆக்கப்பூர்வமான செயல் திட்டமோ இல்லை. திமுக மீதான வெறுப்பு என்பதே அந்த மேடையில் உமிழப்பட்ட அரசியல். ‘ஆட்சிக்கு வருவோம்’ என்று பகல் கனவை ஆர்பரித்து முழங்கிய முழக்கமாக அது இருந்தது" என விமர்சித்தார்.
வாக்குத் திருட்டு குறித்த கேள்வி
பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் விஜய் கூறியது குறித்தும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். "கொள்கை இல்லாமல் அரசியல் இல்லை, அரசியல் இல்லாமல் கொள்கை இல்லை. திமுக அரசியல் எதிரி என்றால், அதன் கொள்கை எதிரி இல்லையா? பா.ஜ.க. கொள்கை எதிரி என்றால், அரசியல் எதிரி இல்லையா? இதில் குழப்பத்தில் உள்ளனர். அதிகாரத்தின் மீது உள்ள வெறி திமுக மீதான வெறுப்பாக மாறி இருக்கிறது" என்று அவர் கூறினார்.
மேலும், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தைக் குறிப்பிட்டு, "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வாக்குத் திருட்டு குறித்து விவாதித்து வருகின்றனர். வாக்குத் திருட்டில் தேர்தல் ஆணையமே பாஜகவுக்கு துணை போகிற குற்றச்செயல் குறித்து த.வெ.க.வின் நிலைப்பாடு என்ன? இந்த ஜனநாயகத்தை சிதைக்கக்கூடிய கொடிய சட்டங்கள் குறித்து அவர்களின் நிலைப்பாடு என்ன?" என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.
எம்.ஜி.ஆர். குறித்து நான் பேசியபோது எகிறி குதித்தவர்கள், இப்போது வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.