"எம்ஜிஆர் வளர்த்த அதிமுக யாரிடம் இருக்கிறது என விஜயே தேடிச் சொல்லட்டும்" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
"எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சியாகவே நினைக்கவில்லை; திமுக கூட்டணி அசைக்க முடியாத சக்தி என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
விஜய் - பாஜக குறித்த புரிதல்
தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, "எங்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் சி டீம் என்று நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம். அதனால அவர்களைப் பற்றி நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை. பாஜகவை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனம் செய்வது அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான்" என்று கூறினார். மேலும், "எம்ஜிஆர் வளர்த்த அதிமுக யாரிடம் இருக்கிறது என்று விஜயே தேடிப் பார்த்து சொல்லட்டும்" என்றும் சவால் விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியே அல்ல
வரும் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகப் பேசிய அமைச்சர், "எடப்பாடி பழனிசாமியை வருகின்ற தேர்தலில் எதிர்க்கட்சியாகவே நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் எந்த கூட்டணியோடு வந்தாலும் எங்களைப் பொருத்தவரை திமுக கூட்டணி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது. திமுகவை ஒழிக்க எங்களால் மட்டும்தான் முடியும் என்று எடப்பாடி பழனிசாமி பேசும் வசனம் மக்கள் மத்தியில் எடுபடாது" என்றார்.
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும், ஆம்புலன்ஸில் ஆட்களை ஏற்றிச் செல்வதை மக்கள் நேரடியாகப் பார்த்துள்ளார்கள், இதில் ஏமாற்றுவதற்கு வழியில்லை என்றும் அமைச்சர் ரகுபதி விளக்கமளித்தார்.
திமுகவின் வெற்றி மிக எளிது
திமுக தலைமையிலான ஆட்சி குறித்துப் பேசிய அவர், "நாங்கள் வீடு வீடாகச் சென்று மக்களுடைய நாடியை பார்த்திருக்கின்றோம். இதுவரை எந்த தேர்தலிலும் ஆறு மாதம், எட்டு மாதம் முன்னரே வாக்காளரை சந்தித்து அவர்களின் நாடியை பிடித்துப் பார்த்த கட்சி கிடையாது. அந்த கட்சி திமுக மட்டும்தான். பொதுமக்கள் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றார். "தேர்தல் களத்தில் எத்தனையோ எதிர்க்கட்சிகள் இருந்தாலும், திமுகவை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் படைத்த எதிர்க்கட்சி கிடையாது. எத்தனை முனைப் போட்டிகள் இருந்தாலும் திமுகவின் கூட்டணி வெற்றி மிக எளிதாக இருக்கும்" என்றும் அமைச்சர் ரகுபதி நம்பிக்கைத் தெரிவித்தார்.