நாட்டில் நிறைய பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள்.. விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்!
திமுகவின் இரட்டை வேடம் குறித்துக் கேள்வி! 'போதையை ஒழிப்பேன் எனச் சொல்லி, தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கிறார்கள்' என சரமாரி தாக்குதல்!
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் காட்டமாகப் பேசினார்.
முதலில், தெரு நாய்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும். அதனை கட்டுப்படுத்த போராட வேண்டும்" என்று கூறினார்.
பின்னர், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், "நான் ஒரு ஆய்வாளர் இல்லை. அது ஒரு கட்சியின் மாநாடு. அந்த மாநாட்டின் நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். ஆனால், முதல் நாளே மாநாட்டிற்குச் சென்றது நாட்டில் நிறைய பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது" என விஜய்யையும் அவரது தொண்டர்களையும் விமர்சித்தார்.
திமுகவின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பிய சீமான், "தமிழுக்கும் தமிழருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்துள்ளது? ஆபரேஷன் செந்துறைக்கு ஆதரவு அளித்து வெளிநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றபோது ஏன் இந்த கொள்கை தெரியவில்லை? வாஜ்பாய் ஆட்சியில் கொள்கை ஏற்புடையதாக இருந்தது ஆனால் இப்போது ஏற்கவில்லையா? குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசினீர்கள், இப்போது கூட்டணியில் இல்லை என்பதால் மணிப்பூர் கலவரத்தை எதிர்க்கிறீர்கள்" என்று சாடினார்.
மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டைத் தடை செய்வது மகிழ்ச்சியான விஷயம் என வரவேற்ற சீமான், "தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, போதையை ஒழிப்பேன் என்று கூறுவது எப்படி. அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு எனச் சொல்லி குடிசையை கொளுத்தி விட்டுத்தான் குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக் கூறி மதுவை குடித்து தான் ஒழிக்க முடியும்" என்று விமர்சித்தார்.