மதுரை மாநாடு: இப்போதே 75,000 பேர் திரண்டனர்! விஜய் மாநாட்டு மேடையில் இன்று அதிரடி!
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டில் மாலை 5 மணிக்கு விஜய் உரை; நள்ளிரவில் சுங்கச்சாவடிகளில் நடந்த கலாட்டா!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பே மாநாட்டுத் திடலில் சுமார் 75,000 பேர் வரை திரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாடு மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 3 மணியளவில் விஜய் அவருக்காக அமைக்கப்பட்ட நடைமேடையில் ‘ரேம்ப் வாக்’ வருவார் என்றும், பிறகு புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் உரையாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை 5 மணியளவில் நடிகர் விஜய் தனது மாநாட்டு உரையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவரது பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று நள்ளிரவில் வந்த சில வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தைச் செலுத்த மறுத்து சேதப்படுத்திய சம்பவங்களும் நடைபெற்றன.
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த மாநாடு பார்க்கப்படுவதால், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.