"மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்!" - கர்ப்பிணிப் பெண் பரபரப்புப் புகார்!
"ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம்; முதல் மனைவியுடன் தொடர்பு இருப்பது தெரியாது" - காவல் ஆணையரகத்தில் புகார்!
சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் ரங்கராஜின் மனைவி என்றும், ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
"நீதி வேண்டும்!"
சென்னையில் உள்ள எம்.ஆர்.சி. நகர் திரிவேதியம்மன் கோவிலில் தங்களுக்குத் திருமணம் நடந்ததாகக் கூறும் ஜாய், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் ஒரே வீட்டில் வசித்துவந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, தான் ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், ரங்கராஜ் தன்னைத் தொடர்புகொள்ளவில்லை என்றும், தமக்கும் குழந்தைக்கும் நீதி வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் முறையிட்டுள்ளார்.
தாக்குதல் புகார்
சமீபத்தில் ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் ரங்கராஜைச் சந்தித்தபோது, அவர் தன்னுடன் பேச மறுத்ததாகவும், மீண்டும் பேச முயன்றபோது பலர் முன்னிலையில் தன்னைத் தாக்கியதாகவும் ஜாய் குற்றம் சாட்டியுள்ளார். ரங்கராஜின் நண்பர்கள் அல்லது அவரது தம்பி போன்ற சிலர், அவர் தன்னுடன் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து காவல் ஆணையரகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.