இரண்டு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத குடிநீர்க் குழாய் உடைப்பு; கழிவுநீருடன் கலந்து ஓடும் குடிநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் பொதுமக்கள்!
ராணிப்பேட்டை: குடிநீர் குழாய் உடைந்து வீணாவதாகப் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை 17-வது வார்டில், சுடுகாடு சாலை காரிய மேடை எதிரே உள்ள குடிநீர்க் குழாய் உடைந்து, 24 மணி நேரமும் குடிநீர் வீணாகிக் கொண்டி`ருக்கிறது.
அதிக அளவில் வீணாகும் குடிநீர், நிலத்தில் தேங்கி நிற்கிறது. அத்துடன், அருகில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து வெளியேறும் நீர், இந்த சுத்தமான குடிநீருடன் கலந்து, அப்பகுதியில் ஒரு சுகாதாரக் கேட்டை உருவாக்கியுள்ளது. இதனால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, அப்பகுதி மக்கள் நோய்த்தொற்று அபாயத்தில் உள்ளனர்.
இந்த அவலநிலை குறித்துப் பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், ஊர் நாட்டாமை சார்பாகவும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தும், நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் பிரச்சனையை உடனடியாகச் சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாவட்ட சிறப்புச் செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்