போலியான முதலீட்டு செயலிகள்.. ஆன்லைன் முதலீட்டு மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை!
"அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு போலியான நிறுவனங்களுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம்" - சென்னை காவல் துறை!
பிரபல நிதி நிறுவனங்களின் பெயர்களைப் போலியாகப் பயன்படுத்தி, ஆன்லைன் முதலீட்டு மோசடிக் கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகச் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடிக் கும்பலின் தந்திரம்:
சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை அணுகும் இந்தக் கும்பல், "அதிக லாபம் கிடைக்கும்" என்று ஆசைவார்த்தை கூறி, அவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கிறது. பிறகு, போலியான முதலீட்டுச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லி, பணம் செலுத்தத் தூண்டுகின்றனர்.
ஆரம்பத்தில், முதலீடு செய்தவர்களுக்கு ஒரு சிறிய தொகையை லாபமாக அளித்து, நம்பிக்கையை உருவாக்குகின்றனர். அதன் பிறகு, அதிக லாபம் பெற வேண்டுமானால் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, பொதுமக்களிடமிருந்து பெருமளவு பணத்தை மோசடி செய்கின்றனர்.
காவல்துறை அறிவுறுத்தல்:
IIFL Capital Ltd போன்ற பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தும் போலியான விளம்பரங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத செயலிகள் அல்லது வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் வரும் முதலீட்டு வாய்ப்புகளை நம்ப வேண்டாம்.
எந்த ஒரு ஆவணமோ, ஒப்பந்தமோ இல்லாமல், அடையாளம் தெரியாத நபர்களுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம்.
IIFL அல்லது SEBI-யில் பதிவு செய்யப்பட்ட எந்த நிறுவனமும் இதுபோன்று அங்கீகரிக்கப்படாத வழிகளில் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளாது.
ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால், உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது
https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கவும்.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இது போன்ற மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.