இந்தியப் பிரதமருடன் கைகோர்த்த ஜப்பான் பிரதமர் இஷிபா; இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என மோடி வலியுறுத்தல்!
டோக்கியோ: இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, சர்வதேச அரங்கில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, செமி கண்டெக்டர் துறையில் இந்தியா முத்திரை பதித்து வருவதாகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஜப்பானில் உள்ள டோக்கியோ எலெக்ட்ரான் உற்பத்தி நிறுவனத்திற்கு, அந்நாட்டின் பிரதமர் இஷிபாவுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரதமர் மோடி, டோக்கியோ எலெக்ட்ரான் நிறுவனத்தின் பயிற்சி அறை, உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு ஆய்வகம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
செமி கண்டெக்டர் துறை, இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பில் ஒரு முக்கியப் பகுதி என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி, தற்சார்பு இந்தியா திட்டத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் எனவும், ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் ஒத்துழைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.